மதீனா வரலாற்றில் சில துளிகள்

வடமேல் மாகாணத்தில் குருநாகல் மாவட்டம் கிரியுல்ல கல்வி வலயத்தில் மஸ்லிம்கள் செறிந்து வாழும் சிஙம்பலாகஸ்கொடுவ எனும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளதே மதீனா தேசிய பாடசாலை.

கிராமப் பெரியவரான மர்ஹும் முகந்திரம் சுலைமாலெப்பை விதானையாரின் தலைமையின் கீழ் மர்ஹூம்களான அப்துல் சமது, ஏ. அலித்தம்பி, அப்துல் ஹமீது. அகமது லெப்பை, ஹமீதுலெப்பை, இப்ரா லெப்பை, சாலிய லெப்பை ஆகியோரின் கூட்டு முயற்சியால் மஸ்ஜிதுல் ஜெலாலிய்யாவுக்கு சொந்தமான காணியிலேயே இப்பாடசாலை உருவாக்கப்பட்டது.

1954 ஆம் ஆண்டு தண்டகமுவ தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான திரு ஐ.எம் ஆர். ஈரிய கொல்ல என்பவரின் முயற்சியால் 1954.01.05 ஆம் திகதியன்று 104 மாணவர்களுடன் யாழ்பானத்தைச் சேர்ந்த திரு. ஆர் ஜோசப் என்பவரை தலைமையாசிரியராகக் கொண்டு அரசினர் முஸ்லிம் பாடசாலை என்ற பெயருடன் செயற்படத் தொடங்கியது.

தொடர்ந்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. ஏ. என். தங்க துரை அவர்கள் 1954.05.01 தொடக்கம் 1955.08.31 வரை கடமையாற்றினார். பின்னர் நீர்கொழும்பைச் சேர்ந்த திரு டபிள்ய. ரீ. ரோட்ரிகோ 1955.09.01 தொடக்கம் 1957.12.30 வரை கடமையாற்றினார். இவரது காலப்பகுதியில் தரம் 6 வரையான வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 1957.01.22 இல் பதவியேற்றவர் ஜனாப். ஏன். ஏ சமத். இவரது காலப்பகுதியிலே 1961 க. பொ. த (சா.த) வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டன.

பின்னர் 1963.01.01 அன்று சம்மாந்தறையைச் சேர்ந்த கே. ஏம். ரசூல் என்பவர் 1965.06.05 வரை அதிபராகப் பதவி வகித்தார். இவரைத் தொடர்ந்து 1965 இல் எம். எச். எம் மஃரூப் பாடசாலையைப் பொறுப்பேற்றார்.

1965.07.01 அன்ற பெந்தனிகொடையைச் சேர்ந்த யூ. எல். ஏம் அஷ்ரப் அவர்களால் பாடசாலை பொறுப்பேற்கப்பட்டது. இவரது அயராத முயற்சியால் 80X20 அளவிலான கட்டடமும் குடிநீர்க் கிணறும் அன்றைய கல்வி கலாச்சார அமைச்சின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. 1968.06.30 வரை பாடசாலையை வழிநடத்திய அவரைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில் மர்ஹும் எஸ். ஐ. இஸட் ஆப்தீன் ஜனாப் ஏ. மீரா சாகிப் ஆகியோரும் அதிபராக இருந்து பாடசாலையை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் சென்றனர்.

தொடர்ந்து 1969 முதல் 1970 வரை 1971 முதல் 1977 வரை 1989 முதல் 1992 வரை என்ற மூன்று கட்டங்களில் கடமை புரிந்த ஜனாப் ஏ. எச். எம் மவ்சூர் அவர்களின் காலத்தில் பாடசாலை பாரிய முன்னேற்றம் கண்டது. இவரது காலப் பகுதியிலே அப்போதைய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த திரு. ஜீ. டபளியூ சமரசிங்க அவர்களால் மதீனா மகா வித்தியாலயம் என்ற நாமத்தோடு தரமுயரத்தப்பட்டதோடு விஞ்ஞான கூடம் உட்பட பல கட்டடங்களும் பெறப்பட்டன. இவரது காலப் பகுதியிலே கா.பொ.த உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.

இவரைத் தொடர்ந்து பாடசாலையின் பழைய மாணவரும் பட்டதாரி ஆசிரியருமான மர்ஹூம் ஏ.கே.எம். சலாம் அவர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்றார். 1977.09.19 முதல் 1980.05.06, 1984.06 முதல் 1989.05.12 என இரண்டு கட்டங்களில் இவரது சேவைக் காலம் தொடர்கிறது. இவரது காலப் பகுதியில் பாடசாலை பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டது. அன்றைய கல்வி அமைச்சர் திரு. லயனல் ஜயதிலக அவர்களால் பல கட்டிடங்கள் பெறப்பட்டதோடு கொடைவள்ளல் அல்ஹாஜ் மர்ஹும் நளீம் ஹாஜியார் அவர்களால் மாணவர்களுக்கான விடுதியும் அப்பாஸ் அன் கம்பனி உரிமையாளர் அல்ஹாஜ் சரீப் அவர்களின் உதவியால் மாணவர்களுக்கான விடுதியும் பெற்றுக்கொள்ளப்பட்டது.

1980 இல் பாடசாலையைப் பொறுப்பேற்ற ஜனாப். எம். ரீ. ஆதம்புள்ள அவர்களும் பாடசாலையின் வளர்ச்சியில் சிறந்த தொண்டாற்றியவராவார்.

1992.02.01 இல் பாடசாலையைப் பொறுப்பேற்ற ஜனாப் எம். எல். எம். இஸ்மாயில் அவர்கள் பாடசாலைக்கு அயராது உழைத்த மாமனிதராவார். இவரது காலப் பகுதியிலேயே பாடசாலை பல வளர்ச்சிக் கட்டங்களை எட்டியது. இக்காலப்பகுதிலேயே இப்பாடசாலை 1-C தரத்திலிருந்து 1-AB தரத்திற்கு தரமுயர்த்தப்பட்டது. புாடசாலையின் பௌதீக வளங்களும் அதிகரிக்கப்பட்டன.

முன்னால் பிரதிக் கல்விப் பணிப்பாளரான அல்ஹாஜ் எம்.ஜே.எம் வாஜித் அவர்களின் உதவியுடன் அப்போதைய அரசாங்கத்தினால் பாடசாலை கேட்போர்கூடம் பெறப்பட்டது. மேலும் இரு மொழி மூல வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டதோடு கலாநிதி மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.எம்.எம். சஹாப்தீன் அவர்கள் மூலம் பெண் மாணவியர்களுக்கான மாடி விடுதியம் பெறப்பட்டது.

இக்காலப் பகுதியிலேயே பாடசாலை அதன் பொன் விழாவைக் கொண்டாடியது. அப்போது குளியாப்பிடிய தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. பியஸோமா உபாலி அவர்களால் மூன்றுமாடி வகுப்பறைக் கட்டடமும் தனவந்தர்களின் உதவியால் பாடசாலை நுழைவாயிலும் பழைய மாணவர்கள், பெற்றோர்களின் உதவியால் சுற்று மதிலும் அமைக்கப்பட்டது. இவ்வாறு பாடசாலைக்கு அயராது உழைத்த அதிபர் இஸ்மாயில் அவர்கள் 2006.12.12 ஓய்வு பெற்றுச்செல்லும் போது அப்போதைய பிரதி அதிபராக இருந்த ஜனாப் எம்.டீ.எம் முதம்மிர் அவர்களிடம் பாடசாலையை கையளித்துச் சென்றார்.

2006.12.13 தொடக்கம் 2009.06.10 வரையான காலப் பகுதியில் ஜனாப் எம்.டீ.எம் முதம்மிர் அவர்கள் அதிபராக இருந்து பாடசாலை வளர்ச்சிக்காக அயராயது உழைத்தார். அவரது காலப்பகுதியில் ஆரம்ப பிரிவினரையும் சிரேஷ்ட – பிரிவினரையம் இணைக்கும் மேம்பாலமும் வாசிகசாலைக் கட்டடமும் நிர்மாணிக்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து 2009.06.11 தொடங்கி 2010.04.21 வரை எமது கிராமத்தைச் சேர்ந்த ஜனாப் ஏ.எல்.எம். மன்சூர் அவர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்றார். அவருக்குப் பின் பறகஹகொடுவ ஜனாப் ஏ.எல்.எம். சத்தார் பாடசாலையைப் பொறுப்பேற்று தம் பணியை செவ்வனே நிறைவேற்றினார்.

2010.09.23 தொடக்கம் 2014.03.20 வரை பலாங்கொடையைச் சேர்ந்த அல்ஹாஜ் எம்.ஜே.எம் மன்சூர் அவர்கள் பாடசாலையைப் பொறுப்பேற்றார் இவரும் பாடசாலை முன்னேற்றத்தில் காத்திரமான பங்களிப்புக்களைச் செய்தவராவார். இவரது காலப் பகுதியிலே வாமி நிறுவனத்தின் உதவியுடன் பள்ளிவாசல், எஸ்.எம். நவாஸ் ஆசிரியரின் உதவியுடன் ஏசியன் குரூப் கம்பனி பிரைவட் லிமிடட் உரிமையாளர் அல்ஹாஜ் ஹாஜா ஹுசைன் அவர்களின் அனுசரனையில் மாணவர் விடுதியில் ஹாஜா ஹுசைன் மண்டபமும் திறந்து வைக்கப்பட்டது.

2014.03.20 முதல் எமது கலையகம் புதியதொரு அத்தியாயத்தில் கால்பதித்தது. அதுதான் மதீனாவின் பழைய மாணவரும் ஸ்தாபகர் ஒருவரின் புதல்வருமான சியம்பலாகஸ்கொடுவையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம். ஆர்.எம். ஸகரிய்யா அவர்கள் பாடசாலையின் அதிபராகப்பொறுப்பேற்றார்கள். அதிபரின் வருகையோடு பாடசாலை விடயங்களில் மாற்றத்தை எம்மால் காண முடிந்தது.

மாற்றம் என்ற சொல்லைத் தவிர அனைத்தும் மாற வேண்டும் என்ற அதிபரின் கொள்கைப்படி பாடசாலையின் பௌதிக வளங்கள் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியிலும் சிறந்த மாற்றத்தை எம்மால் காண முடிந்தது. கண்ணைக் கவரும் வகையில் பாடசாலைச் சூழல் மாற்றியமைக்கப்பட்டது.

அப்போதைய கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அவர்களின் உதவியால் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடமும் மூன்று மாடி கொண்ட தொழிநுட்ப பிரிவு போன்றன மாணவர் பாவனைக்கு வழங்கப்பட்டதுடன் மூன்று மாடிகள் கொண்ட நிர்வாக கட்டிடமும் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

தொழிநுட்ப வகுப்பு அனுமதியுடன் 13 ஆண்டு தொடர் கல்வித்திட்ட அனுமதியும் அதிபரின் காலப் பகுதியிலே ஆரம்பிக்கப்பட்டு அதற்கான பௌதீக வளங்களும் பெற்றுக்கொள்ளப்பட்டன.

கொடை வள்ளளான அல்ஹாஜ் எம்.எச்.எம். ஹாஜா ஹூசைன் அவர்களின் உதவியுடன் மாணவர் விடுதியின் இரண்டாம், மூன்றாம் மாடிகள் கட்டி முடிக்கப்பட்டன.

கண்ணைக் கவரும் வகையில் கேட்போர் கூடம் மெருகூட்டப்பட்டடு 534 சொகுசு ஆசனங்கள் பொருத்தப்பட்டதும் அதிபரின் முயற்சியினாலாகும்.

இக்கலையகம் தனது வைர விழாவை வெகு விமர்சையாகக் கொண்டாடியதும் அதிபரின் காலப் பகுதியிலேயாகும்.

பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகளின் உதவியோடு பாடசாலையின் நீண்ட காலத் தேவையாக இருந்த போக்குவரத்து வசதியின் பொருட்டு சொகுசு பேரூந்து வண்டியும் கொள்வனவு செய்யப்பட்டு மாணவர் பாவனைக்குவிடப்பட்டது.

பௌதீக வளங்களில் எந்தக் குறைவுமின்ற அவற்றைப் பெற்றுத் தந்த அதிபர் அவர்களின் சிறந்த வழிகாட்டல் காரணமாக மிகக் குறுகிய காலத்தில் பாடசாலை வரலாறு காணாத சிறந்த பெறுபேற்றைப் பெற முடிந்துது. 2019 ஆம் ஆண்டு உ.த பெறுபேறுகளில் சகல துறைகளிலும் கணிசமான அளவு மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்பட்டனர்.

கல்வித் துறை மட்டுமல்லாது இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர்கள் வெற்றிவாகை சூட இவ்வதிபரின் வழிகாட்டலே காரணமாக அமைந்தது. நிர்வாகத் திறமையும் சிறந்த ஆளுமையும் மிக்க எம் அதிபர் அவர்களின் கனவு நனவாகி நிறைவேறிக்கொண்டிருக்கின்றன

மதீனா தேசிய பாடசாலையின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர், நலன்விரும்பிகள் அனைவரையும் மதீனா என்றென்றும் நினைவு கூறும்

எமது நாட்டில் விலை மதிக்க முடியாத சொததாகத் திகழ்கின்ற எமது கலையகம் என்றென்றும் பாரினில் நிகரான செல்வமாகத் திகழ எல்லாம் வல்ல இறைவனின் அருள் கிட்டட்டும்.

ரிஸ்வானா டீச்சர்