ஏ-லெவல் ரிஸல்ட்ஸும் பாராட்டு விழாவும்

உயர் தரப் பரீட்சையில் கணித விஞ்ஞான மற்றும் கலைப் பிரிவுகளில் சிறந்த பெறுபேறுகளை மாணவர்கள் பெற்றிருந்தாலும் இ-டெக் பிரிவில் ICT பாடத்தில் மாணவர்களின் பெறுபேறு திருப்திகரமாக இல்லை என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த வருடம் மட்டுமல்ல ICT பாடம் மதீனாவில் ஆரம்பிக்கப்பட்டு (2013)  முதற் பரீட்சைக்குத் தோற்றியது (2015) முதல் இன்று வரை C-திறமைச் சித்தியைத்  தாண்டி எவருமே B சித்தியோ அல்லது  A சித்தியோ பெற வில்லை என்பது கவலைக்குரிய விடயம்.

பரகஹதெனியவில் மத்ரஸா மாணவர்கள் கூட இவ்வருடம் ICT  பாடத்தில் A, B   தரங்களைப் பெற்றிருக்கிறார்கள்

ICT  பாட பெறுபேறுகளைப் பார்த்த சக ஆசிரியர் ஒருவர்  ” ICT பாடம் நீங்களா சர் செய்றீங்க?”  என சில தினங்களுக்கு முன்னர் என்னிடம் கவலையோடு கேட்டார். அந்தக் கேள்வி எனக்கு சங்கடமாக இருந்து. அதனால்தான் இதனை எழுத வேண்டியேற்பட்டது.

வேறு பாடங்களைப் பற்றி நான் இங்கு கருத்துச் சொல்ல முன் வரவில்லை. ஆனால் ICT  பாடத்தைப் பற்றிக் கருத்துச் சொல்ல எனக்கு நிறையவே தகுதியிருப்பதால் சொல்கிறேன்.

ICT  பாடத்தில் மாணவர்கள் விசேட சித்திகளைப் பெறாமைக்கு நிச்சயமாக பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியர் பொறுப்பல்ல என்பதை முதலிலேயே சொல்லிக் கொள்கிறேன்.  ஐசிடி பாடம் கற்பிக்கும் அஸ்பா டீச்சர்  திறமையாகவும்  அர்ப்பணிப்புடனும்  செயற்படுவதை நான் அறிவேன்.

மாணவர்கள் விசேட சித்திகளைப்  பெறாமைக்கு நான் இரண்டு  காரணங்களைக் குறிப்பிடுகிறேன்.

காரணம் 1

சாதாரண தரத்தில் சுமாரான சித்தி எய்துபவர்களே உயர் தர தொழிநுட்ப பாடப் பிரிவில்  சேர்கிறார்கள்  அல்லது சேர்க்கப்படுகிறார்கள். அவர்கள் கலைப் பிரிவிற்குத் தகுதியானவர்கள். கலைப் பிரிவில் மிளிரக் கூடியவர்கள். தொழிநுட்ப பிரிவில் சேர்ந்து தோற்றுப் போகிறார்கள்.

காரணம் 2

ICT  என்பது கம்பியூட்டர்  தொழிநுட்பம் அதிகளவில் சார்ந்த ஒரு பாடம். அது தியரி – theory  மற்றும் ப்ரேக்டிக்கல் – practicals இரண்டையும் உள்ளடக்கியது. தியரி பகுதியில்  மட்டும் கவனம் செலுத்தி மாணவர்களை  S அல்லது C சித்தியோடுதான் சித்தியடைய வைக்க முடியும். விசேட சித்தி பெற மாணவர்கள் ப்ரேக்டிக்கல்ஸ் பகுதியிலும் போதிய பயிற்சி பெற வேண்டும். 

 • PYTHON
 • HTML
 • PHP
 • CSS
 • SQL
 • ARDUINO (சிறிதளவு C /C++)

  மேலே பட்டியலில் இருப்பது ICT பாடத்திட்டத்தில்  இருக்கும் செயன்முறையுடன் (Practicals) கூடிய பகுதிகள். இவற்றை மாணவர்கள் கட்டாயம் கம்பியூட்டரிலேயே பயிற்சி பெற வேண்டும். அவற்றை மனனம் செய்வதால் பயனில்லை.

டெக்னோலஜி லேபிற்கென கிடைக்கப் பெற்றிருக்கும் , இயந்திரங்கள் மற்றும் கருவிகளை மாணவர்கள் பயன் படுத்த வேண்டும், தியரியாகக் கற்பதை பிரயோகித்துப் பார்க்க வேண்டும் எனும் நோக்கத்திலேயே தரப்படுள்ளன. வெறும் காட்சிப் பொருளாக வைப்பதற்கல்ல. அவை அங்கு ஓரளவு பயன் படுத்தப்படுவதை நான் பார்த்திருக்கிறேன். அதை போன்றதுதான் ஐ.சி.டி பாட பிரயோகமும்

கரும்பலகையிலோ காகிதத்திலோ மேற் சொன்ன பகுதிகளை செயற்படுத்திப் பார்க்க முடியாது. அவை என்ன என்பதை மாணவர்களின் கை விரல்களாலும் (feel) உணரப்பட  வேண்டும். அப்போதுதான் அப்பகுதிகள் என்ன என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். அவை சார்ந்த கேள்விகளுக்கு நம்பிக்கையோடு மாணவர்கள் பதிலளிக்க முடியும்.

உயர் தர ஐ.சி.டி பாடத்திட்டத்தின் அறிவுறுத்தல் பகுதியிலிருந்து

கம்பியூட்டரில் அவர்கள் பெறும்  பயிற்சி F ஐ  Sஆகவோ  S ஐ  C ஆகாவோ  C  ஐ B ஆகவோ நிச்சயம் முன்னே தள்ளி விட உதவும்.

ஆனால் அந்த வாய்ப்பு எமது  மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. காரணம் எமது கணினி கூடத்தில் கம்பியூட்டர் வசதி இல்லை. கம்பியூட்டர் வசதியைப் பெற்றுக் கொடுக்காமல், மதீனாவில் ICT   பாடமும் கற்பிக்கப்படுகிறது என பெருமைக்காகக் கற்பிப்பதில் பயன் இல்லை.

பாவனைக்குதவாத கம்பியூட்டர்களைக் கொடுத்து பேரீச்சம்பழம் வாங்கிய காட்சி

அதனால் எந்த வழியிலாவது மாணவர்களுக்குக் கம்பியூட்டர் வசதியைப் பெற்றுக் கொடுக்க அதிபர் முன் வர வேண்டும். அந்த கம்பியூட்டர் புத்தம் புதிய லேட்டஸ்ட் கம்பியூட்டராக இருக்க வேண்டிய அவசியமில்லை. குறைந்த விலைக்குக் கிடைக்கும்  பாவித்த கம்பியூட்டர்களும் (Used Computers / Refurbished Computers) போதுமானவை. அந்தக் கம்பியூட்டகளும் குறைந்தது 5 வருடங்களாவது தாக்குப் பிடிக்கும்.

பாவித்த (used computers) கம்பியூட்டர்களை  பாடசாலைக்கு வாங்க அனுமதியில்லை  எனும் விடயத்தை நானும் அறிவேன். ஆனால் அதற்கு வேறு வழிகளைக் கையாள முடியும்.

இம்முறை உயர் தரம் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்காக பாராட்டு விழா எற்பாடு செய்யப் போகிறோம், ஆசிரியர்களுக்கு பகற்போசண விருந்துபசாரம் வழங்கப் போகிறோம் என ஒரு  கூட்டம் நிச்சயம் கிளம்பி வரும். அந்தக் கூட்டத்தை அப்படியே திசை திருப்பி அவர்கள் மூலம் ஐந்தோ பத்தோ  கம்பியூட்டர்களை வாங்கிப் போட முடியும். 

பல்கலைக் கழக பிரவேசத்திற்காகக் காத்திருப்போருக்கு பாராட்டு விழா, பரிசெல்லாம் அவசியம்தானா? அவர்களுக்கு பல்கலைக்கழகம் செல்லும்  வாய்ப்பே ஒரு பெரும் வரம். அதற்கு மேல் என்ன பாராட்டு?  ஒரு வேளை கற்பித்த ஆசிரியர்களுக்கு இது ஏமாற்றமளிக்கக் கூடும். 😀.

புதிய கம்பியூட்டர்களை  அதிபர்  அறிந்த வேறு வழிகளில்  பெற்றுக் கொடுக்க முடிந்தாலும்  மகிழ்சியே!

ஆனால் புதிய கட்டடத்தில் அமையவிருக்கும் கம்பியூட்டர் பிரிவைக் காரணம் காட்டி கல்வி அமைச்சின் மூலம் எதிர் காலத்தில் கிடைக்கலாம் எனும் எதிர் பார்ப்பில் இன்னுமின்னும் காலம் தாழ்த்தக் கூடாது. 

பழைய கம்பியூட்டர்களுக்கு மாற்றீடாக (Replacement) புதிய கம்பியூட்டர் இன்று வரும் நாளை வரும் என  10 வருடங்களுக்கு மேல் காத்திருந்து ஏமாந்த அனுபவம் எனக்கிருக்கிறது. 😀.

மதீனாவில் ஒன்றல்ல; மூன்று கம்பியூட்டர்  பிரிவுகள் அமைக்கப்பட்டாலும் அது வரவேற்கத்தக்கது. காரணம் இப்போது  தரம் 6 முதல் 13 வரை ஐசிடி பாடம் கற்பிக்கப்படுகிறது,

 • தரம் 6-9 ஐ.சி.டி பாடத்திட்டங்களும் பெருமளவு செயன்முறை சார்ந்தவை
 • சாதாரண தர ஐசிடி பாடமும் இதேபோல் செயன்முறை உள்ளடக்கியது
 • தரம் 12 GIT பாட பரீட்சை கூட Online ஆகவே மாறியிருக்கிறது..

இப்படி அனைத்திற்கும் கம்பியூட்டர் அவசியம் 

பரீட்சைக்கு முன்தினம் கேட்போர் கூடத்திற்கு மாணவர்களை அழைத்துச் சென்று ப்ரோஜெக்டரில் பாடம் நாடாத்தி அவர்களை சித்தியடைய வைக்க முடியாது.

ஐ.சி.டி மாணவர்களுக்கு மட்டு மன்றி அனைத்து ஆசிரியர்களுக்கும் கம்பியூட்டர் கல்வி இன்று அத்தியாவசிய தேவையாக மாறியிருக்கிறது.

அதனால் இதற்குத் தீர்வாக ஏதாவது மாற்று வழிகளை அதிபர் சிந்திக்க வேண்டும். 

அதற்காக எங்கோ தொலை தூரத்திலிருக்கும் ஹாஜி மார்களை, சீமான்களை அணுகத் தேவையில்லை. அவர்கள் மட்டும்தான் இதற்கு உதவ வேண்டும் என்பது அவர்கள் தலையெழுத்தா?

மதீனாவில் புதிதாக அனுமதி பெற வரும் வசதியுள்ள மாணவர்களின் பெற்றோரிடம் ஒரு சிறு கோரிக்கை வைத்தாலும் ஒன்றோ, இரண்டோ கம்பியூடர்களை அவர்கள் வசதிக்கேற்றவாறு வாங்கித் தருவார்கள். அவர்களைக் கட்டாயப் படுத்தாதவரை அது லஞ்சமாகாது, குற்றமாகாது. சில பாடசாலைகளில் அனுமதிக்கு வருவோரிடம் ”25 தாங்க.. 50 தாங்க” என கட்டாயப் படுத்தி காசு வாங்குவதைப் பற்றி எல்லாம் நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.

அதுவும் நல்ல யோசனையாகத் தெரியாவிட்டால் இந்த மதீனா வாட்சப் குரூப்பிலுள்ள ஆசிரியர்களுக்கு  ஒரு கோரிக்கை வைத்தால் கூட தங்கள் வசதிப்படி ஒரு மொனிட்டர், ஒரு சிஸ்டம் யூனிட், ஒரு டேபல், ஒரு ப்ரிண்டர், யூபீஎஸ், கீபோர்ட், மவுஸ் என ஒவ்வொருவரும் நிச்சயம் வாங்கித் தருவார்கள். 

இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊரைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு அவர்களது மதீனா மீதான பற்றை, பாசத்தை, விசுவாசத்தை, நன்றியுணர்வைக் காட்டவும் இது ஒரு வாய்ப்பாக அமையும். பல ஆசிரியர்களின் பிள்ளைகளும் இதே மதீனாவில்தான் கல்வி கற்கிறார்கள் என்பதையும் நினைவூட்டுகிறேன்.

ஆசிரியர்கள் தயாரென்றால் விலை விவரங்களைத் தர நான் தயாராக இருக்குறேன்.

நீங்கள் வாங்கிக் கொடுக்கலாமே சர்? என சில பேர் என்னைக் கேட்கலாம். நான் இந்த பிரதேசத்தைச் சேர்ந்தவனுமில்லை;எனது பிள்ளைகள் யாரும் இங்கு கல்வி கற்பதுமில்லை.

உங்கள் பிள்ளைகள் கல்வி கற்பதற்காக நான் எதற்காக கம்பியூட்டர் வாங்கித் தர வேண்டும்? எனக்கெதற்கு வேண்டாத வேலை? 😀😀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *