எமது கிராமத்தின் வரலாறும் வளர்ச்சியும்
வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த குருநாகல் மாவட்டத்தில் உள்ள குளியாப்பிட்டிய தேர்தல் தொகுதியில், குளியாப்பிட்டிய கிழக்குப் பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது எமது ஊர்.
இங்குள்ள மஸ்ஜிதுல் ஜலாலுல்லாஹ் ஜூம்மாப் பள்ளிiயை மையமாகக் கொண்ட சியம்பலாகஸ்கொடுவ, கஹடகஹமட, அம்மயன்குளம், பரகஹகொடுவ, ஹஸ்கம்பொல,நூராணியாகம என்னும் கிராமங்களை உள்ளடக்கியதே எமது ஊர் பிரதேசமாகும்.
எமது பிரதேசம் விசிநவ என்ற பிரதேசத்தில் அடங்கிய எல்லைக்குள்ளே அமைந்துள்ளது. இவ்வூரின் வரலாற்றில் மஸ்ஜிதுல் ஜலாலுல்லாஹ் ஜூம்மாப் பள்ளி முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஆரம்பத்தில் சுமார் கி.பி. 1800 இல் ஜூம்மாப் பள்ளி பரகஹகொடுவ இல் அமைந்திருந்தது. பிறகு இங்கு இந்தியாவில் இருந்து மார்க்கப் பிரச்சாரத்துக்கு வரும் கோட்டார் பாவா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கிருந்த ஜூம்மாப் பள்ளியை பெயர்த்து 1881 ஆம் ஆண்டளவில் இப்போது அமைந்துள்ள மஸ்ஜிதுல் ஜலாலுல்லாஹ் ஜூம்மாப் பள்ளி நிர்மாணிக்கப்பட்;டது. பள்ளிவாசலுக்குரிய காணியை உதுமா லெவ்வை சுலைமா லெவ்வை என்பவரே வழங்கி இருந்தார். இவரே பள்ளிவாயிலில் பேஷ் இமாமாக கடமையாற்றியுள்ளார். (இன்று இப்பள்ளி இரண்டு கட்டங்களாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது.) இவரைத் தொடர்ந்து இப்பள்ளிவாயிலில் பின்வருவோர் பேஷ் இமாமாக கடமையாற்றி உள்ளனர். சுலைமா லெவ்வை முஹம்மது காஸிம், சேகு முஹம்மது லெவ்வை, ஒமர் லெவ்வை சேகு முஹம்மது(மௌலவி), உதுமா லெவ்வை அப்துல் மஜீத் (மௌலவி),முஹம்மது காஸிம் அப்துல் அஸீஸ்(மௌலவி), முஹம்மது காஸிம் ஹிப்பதுல் கரீம்(மௌலவி), அப்துல் அஸீஸ்; கலீலுர்ரஹ்மான ்(மௌலவி), ரஸ்ஸாக் (மௌலவி, மன்னார்),கலீல் (மௌலவி, மன்னார்), மும்தாஸ் ஹாபிஸ், அப்துஸ்ஸமது நஸீர் (மௌலவி).
இப்பள்ளியின் முஅஸ்ஸின்களாக பின்வருவோர் கடமையாற்றியுள்ளனர். சேனா மூனா அஹமது லெவ்வை (காட்டு மாமா), குப்புத்தம்பி அஹமது லெவ்வை, குஞ்சுத்தம்பி இபுறா லெவ்வை, அசனா லெவ்வை, முஹம்மது இஸ்மாயீல், மீரா லெவ்வை, முஹம்மது காஸிம்,செய்னூர்தீன்;, அஹமத் லெவ்வை றாவுத்தர், உதுமா லெவ்வை காஸிம் ஹாஜியார்.
1940 இல் சியம்பலாகஸ்கொடுவயில் 24 வீடுகளும் கஹடகஹமடையில் 19 வீடுகளும் அம்மயன்குளத்தில் 20 வீடுகளும் பரகஹகொடுவயில் 13 வீடுகளும் காணப்பட்டன. இன்று இவவூர்களோடு ஹஸ்கம்பொல, நூரானியா கிராமத்தையும் சேர்த்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் காணப்படுகின்றன. அத்தோடு ஆரம்பத்தில் இப்பிரதேசங்களில் சுமார் 12கடைகள் காணப்பட்டன. ஆனால் இன்று சுமார் 65 கடைகள் காணப்படுகின்றன.
மஸ்ஜிதுல் ஜலாலுல்லாஹ் ஜூம்மாப் பள்ளியை மையமாக வைத்து 4 தக்கியாக்கள் இயங்கி வருகின்றன. இதில் முதலாவது தக்கியா 1966 ஆம் ஆண்டு பரகஹகொடுவையில் அசனா லெவ்வை அப்துஸ் ஸமது அவர்களால் நன்கொடையாய் வழங்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்பட்டது. அது தற்போது (2004) புணர் நிர்மானம் செய்யப்பட்டு இருமாடிகளைக் கொண்ட தக்கியாவாக நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
அடுத்தது அம்மயன்குளத்திலுள்ள தக்கியாவாகும். இத்தகியா 1970.10.08 ம் திகதி காலஞ்சென்ற பிச்சத்தம்பி உதுமாலெவ்வை என்பவரால் வழங்கப்பட்ட காணியில் நிர்மாணிக்கப்பட்டது. பிறகு 1995.12.18 ல் புதிய தக்கியா இரண்டு மாடிகளைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்டது.
அடுத்த தக்கியா ஹஸ்கம்பொல நூரானியாகமயில் உள்ள தக்கியாவாகும். இத்தகியா கொழும்பு சிலோவைலனைச் சேர்ந்த மொஹிதீன் பாவஹாஜி என்பவரால் நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் அன்னாரின் ஒத்தாசையால் 2003.09.23 ல் நிர்மாணிக்கப்பட்டது.
இங்கு குறிப்பிடப்பட்ட பரகஹகொடுவ என்ற ஊர் 1973 இல் அரசால் வழங்கப்பட்ட காணியால் விசாலமானது.ஸ்கம்பொல் நூரானியாகம 1973 ஆம் ஆண்டு அரசால் வழங்கப்பட்ட காணியால் உதயமாகிய ஊராகும்.
எமது பிரதேசத்தின் ஒளி விளக்காய் விளங்கும் மதீனா தேசிய பாடசாலை இன்று இலங்கையின் பிரசித்தி பெற்ற பாடசாலைகளில் ஒன்றாய் விளங்குகிறது. 1953 ஆம் ஆண்டுக் காலகட்டத்தில் ஊர் மக்களின் முயற்சியால் ஓலை வேயப்பட்ட ஒரு சிறு கட்டிடத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு அரச அங்கீகாரம் இன்றி வேதனம் ஏதும் பெறாது மர்ஹ_ம்களான எச்.எல்.யு.எம். ஜூனைத், ஏ.எல். சுலைமா லெவ்வை ஆகிய இருவர்களும் ஆசிரியர்களாக கடமையாற்றிவரும் காலகட்டத்தில் மர்ஹ_ம்களான அல்ஹாஜ் எம்.ஏ. ஸமத், ஹமீத் லெவ்வை விதானை, முஹாந்திரம் சுலைமா லெவ்வை, ஏ.சாலியா லெவ்வை,எம்.ஏ. அப்துல் ஹமீது, ஏ. இபுறா லெவ்வை, ஏ. அஹமது லெவ்வை, ஏ. அலித்தம்பி, ஓ.எல். சேகுமுஹம்மது ஆகியோர் அயராது பாடுபட்டதன் பிரதிபலனாக அக்காலகட்டத்தின்தன்டகமுவ பாராளுமன்ற உறுப்பினராய் இருந்த திரு ஐ.எம்.ஆர்.ஏ. ஈரியகொல்ல அவர்களின் முயற்சியினால்; 1954 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி 104 மாணவர்களுடன் திரு ஆர். ஜோஸப் அவர்களை முதல் அதிபராகக் கொண்டு அரசாங்கப் பாடசாலையாக ஆரம்பிக்கப்;பட்டது. 1956.13 ஆம் திகதி 6 ஆம் வகுப்பு வரை வகுப்புக்கள் வைக்க அனுமதி வழங்கப்பட்டது. 1961.01.02 ஆம் திகதி க.பொ.த. சாதாரண தரம் ஆரம்பிக்கப்பட்டது.1971.01.01இல் மகாவித்தியாலயமாக தரம் உயர்த்தப்பட்டது. 1992.07.13 ஆம் திகதி இப்பாடசாலை1 ஏபி தரத்திற்கு உயர்த்தப்பட்டது. 1994.05.18 ம் திகதி தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பாடசாலையின் முன்னேற்றம் கருதி எம்.ஜீ. நளீம் ஹாஜயாரால் 1979ஆம் அண்டு ஆண்கள் விடுதி ஒன்று நிரமாணிக்கப்பட்டது. அதேபோல் பெண்களுக்கென தேசமான்ய கலாநிதி அல்ஹாஜ் ஏ.எம்.எம். சஹாப்தீன் அவர்களால் 1996.05.19 பெண்கள் விடுதி நிரமாணிக்கப்பட்டது.
மேலும் இப்பகுதியில் உயர் தரமான தூய இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக நுபுவ்வத்துடைய அறிவினைக் கற்ற உலமாக்களும், அல்லாஹ்வின் கலாமாகிய அல்குர்ஆனை மனனம் செய்யக்கூடிய ஹாபிழ்களும் உருவாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் அந்நூர் அறபிக் கல்லூரி என்ற பெயருடன் 1990 ஏப்ரல் 15 ஆம் திகதி தோற்றம் பெற்றது. இன்று சுமார் 150 க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு க.பொ.த.(சா.த), க.பொ.த. (உ.த) பரீட்சைக்குத் தோற்றும் வசதிகளும் உள்ளதோடு தமிழ், ஆங்கிலம் , சிங்களம், உருது போன்ற மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. இவ்வறபிக் கல்லூரி இரு பிரிவுகளாக இயங்குகின்றது. அதில் முதலாம் பிரிவு 7 வருடங்களை உள்ளடக்கிய பாடத்திட்டத்தைக் கொண்டது. இதில் 4ஆம் வருடம் க.பொ.த. (சா.த) பரீட்சைக்கும். 5ஆம் வருடம் அல் ஆலிம் முதலாம் ஆரம்பப் பரீட்சைக்கும் 6 ஆம் வருடம் க.பொ.த. (உ.த) பரீட்சைக்கும், 7அம் வருடம் அல் ஆலிம் இரண்டாம் இறுதிப் பரீட்சைக்கும் மாணவர்கள் தோற்ற் வசதி செய்யப்பட்டுள்ளது. இறுதியில் மாணவர்கள் பூரண கல்வியைக் கற்று அந்நூர் பட்டம் பெற்று வெளியேறுகின்றனர். இதில் இரண்டாம் பிரிவு அல்குர்ஆனை மனனம் செய்வதாகும். இது 3 வருடங்களை அடிப்படையாகக் ;கொண்டது. ஆரம்பத்தில் இக்கல்லூரி மஸ்ஜிதுல் ஜலாலுல்லாஹ் ஜூம்மாப் பள்ளியிலேயே இயங்கி வந்தது. பிறகு அல்லாஹ்வின் கிருபையால் உள்நாட்டு வெளிநாட்டு தலைவர்களின் உதவியால் மாடிக்கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டு சகல நவீன வசதிகளுடனும் இன்று இயங்கி வருகின்றது.
அடுத்த தக்கியா சியம்பலாகஸ்கொடுவ பஸார் தக்கியாவாகும். இதற்குரிய காணியை சியம்பலாகஸ்கொடுவையைச் சேர்ந்த மர்ஹம்களான மீரா லெவ்வை, ஜெமால்தீன் ஹாஜியார் ஆகியோரால் அன்பளிப்புச் செய்யப்பட்டு கொழும்பு புதுக்கடையைச் சேர்ந்த காலஞ் சென்ற நிஸார் ஹாஜியாரால் கட்டப்பட்டது. பிறகு அதே இடத்தில் இரண்டு மாடிகளைக் கொண்ட தக்கியா இப்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
மேலும் சியம்பலாகஸ்கொடுவ கஹடகஹமட மஸ்ஜிதுல் ஜலாலுல்லாஹ் ஜூம்மாப் பள்ளியின் நிர்வாக ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் அரச ஊழியர்களினது பொருளாதார அபிவிருத்தி கருதி 1995 ஏப்ரல் மாதம் இஸ்லாமிய நலன்புரி நிதியம் என்ற பெயரில் வட்டி இல்லா கடன் உதவி புரியும் அமைப்பு உருவாக்கப்பட்டத. முதலில் 12 பேர்100 ரூபா வீதம் 1200 ரூபா மூலதனத்துடன் இந்நிதியம் அமைக்கப்பட்டது. இதற்குத் தலா100ரூபா வீதம் மாதா மாதம் அங்கத்தவரால் செலுத்தப்பட்டு வருகிறது. இதை ஆரம்பிப்பதில் எஸ்.எம்.எம். மிஹலார் ஆசிரியர் டாக்டர் எம்.எஸ்.எம். மன்சூர் முன்னின்று உழைத்தனர். இன்று இது சிபா என்ற பெயரில் இயங்கி வருகிறது. இலட்சக்கணக்கான மூலதனத்துடன் இயங்கும் இந்நிதியத்தில் நூற்றுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் இன்று அங்கம் வகிக்கின்றனர்.
இதில் அங்கம் வகிக்கும் அரச ஊழியர் கணவராயின் மனைவியும் இதில் அங்கத்துவம் பெறலாம். அதே போல் பெண் அரச ஊழியராயின் ஆணும் அங்கத்துவம் பெறலாம் தற்போது அங்கத்துவர் ஒருவருக்கு 28000 ரூபா 15 மாதத்தில் மீளச் செலுத்தும் வகையில் கடன் வழங்கப்படுகின்றது. மேலும் இந்நிதி நிறுவனம் அங்கத்தவர்களின் திடீர் தேவைக்காக 4500ரூபா குறுகிய கால கடன் வழங்குவதோடு அங்கத்தவர்களின் பிள்ளைகளின் நலன் கருதி அவர்களுக் கென சிறுவர் சேமிப்புத்திட்டம் ஒன்றையும் அமுல் நடாத்துகின்றது.
சியம்பளாகஸ்கொடுவ மஸ்ஜிதுல் ஜலாலுல்லாஹ் ஜும்மா பள்ளியை மத்திய தனமாகக் கொண்டு இயங்கும் எமது பிரதேசத்தில் பின்வரும் நோக்கங்களை நிறைவு செய்யும் எதிர்பார்ப்புடன் தாருல் அர்க்கம் நலன்புரிச் சங்கம் (DAWA) எனும் பெயரில் 1999-12-22ம் திகதி சங்கம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அதன் நோக்கங்களாவன
1. இஸ்லாமிய தனி நபர்களை உருவாக்குதல்.
2 இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒன்றை நிறுவுதல்
3. இஸ்லாமிய பாலர் பாடசாலை ஒன்றை நடாத்துதல்.
4. பிரதேச மக்களின் நலன்கருதி நூல் நிலையம் ஒன்றை நிர்வகித்தல்.
5 பாடசாலை கல்வியை பெற்றுக் கொண்டிருக்கும் ஆண் பெண்
இருபாலாருக்குமான பகுதி நேர மத்ரஸா ஒன்றை ஆரம்பித்தல்.
6 ஆங்கிலம், அறபு, கணனி, தொழில் நுட்பம், இஸ்லாமிய அறிவூட்டல்
வகுப்புக்களை ஏற்பாடு செய்தல்.
7 முஸ்லிம்களிடையே ஒற்றுமையை வளர்க்கப்பாடுபடல்.
8. சமூக சேவைகளை ஏற்பாடு செய்தலும் பங்குபற்றலும்.
மேற்படி நோக்கங்களை அடையுமுகமாக முதற்கட்ட நடவடிக்கையாக குவைட் நாட்டைச் சேர்ந்த அரபுச் சகோதரர் ஒருவரின் நிதியுதவியுடன் 60 x 25 அடி இருமாடிக் கட்டடம் ஒன்று நிர்மானிக்கப்பட்டது. இக்கட்டடத்தின் ஒரு பகுதியில் 2002 ஜனவரியில் “இல்மா பாலர் பாடசாலை” எனும் பெயரில் பாலர் பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்பாலர் பாடசாலையில் இஸ்லாமிய பழக்கவழக்கங்கள், தஜ்வீத் முறைப்படி அல்குர்ஆனை ஓதல் என்பன சிறப்பம்சங்களாக கடைப்பிடிக்கப்படுகின்றன.
மேற்படி நலன்புரிச் சங்கத்தின் மற்றொரு நடவடிக்கையாக பாடசாலை செல்லும் 6,7,8ம் தர மாணவ, மாணவிகளுக்கான இஸ்லாமிய அறிவூட்டல் வகுப்பொன்று 2003 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டது. இது “இல்மா இஸ்லாமிய அகடமி” எனும் பெயரில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு இஸ்லாம், தஜ்வீத் என்பன போதிக்கப் படுகின்றன.
மேற்படி நலன்புரிச் சங்கத்தினால் இஸ்லாமிய நூல் நிலையம் ஒன்றும் சிறியளவில் நடாத்தப்படுகின்றது. மேலும் ஆங்கிலம், அறபு, இஸ்லாம் போன்ற பாடங்களும் இளைஞர்,யுவதிகளுக்கு பயனளிக்கும் வகையில் நடாத்தப் படுகின்றன.
அத்தோடு க.பொ.த. உயர்தர விஞ்ஞானப் பிரிவு மாணவர்களின் நலன்கருதி NAASA எனும் சங்கத்தின் மூலம் மேலதிக வகுப்புக்கள் சனி, ஞாயிறு தினங்களில் நடாத்தப்படுகின்றன. இவ்வகுப்புக்கள் DAWA நலன்புரிச் சங்க கட்டடத்தில் நடைபெறுவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். மேலும் எதிர்காலத்தில் தாருல் அர்கம் நலன்புரிச் சங்கத்தின் ஏனைய நோக்கங்களை அடையவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மிஹ்லார்
(மறைந்த முன்னாள் ஆசிரியர் /ஆசிரிய ஆலோசகர்)