மதீனாவின் சிரேஷ்ட ஆசிரியை சிதாரா பானு அவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி தனது 31 வருட கால சேவையின் பின்னர் ஆசிரியர் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
பானு டீச்சர் அவர்கள் பொல்கஹவெல, பந்தாவயைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.
1961 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதியன்று பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வி மற்றும் உயர் கல்வியை பொல்கஹவெல முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பெற்றார்.
உயர் தரத்தில் வர்த்தகப் பிரிவைத் தெரிவு செய்த இவர் உயர் தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்றாலும் இரண்டொரு வெட்டுப் புள்ளிகளால் பல்கலைக் கழகம் செல்லும் வாய்ப்பை இழந்தார்.
இருந்தாலும் 1990 ஆம் ஆண்டில் தான் ஆசைப் பட்டது போல் ஒரு ஆசிரியையாகும் வாய்ப்பு இவருக்குக் கிட்டியது.
1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி பொல்ஹகவெல அல் இர்பான் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக முதல் நியமனத்தைப் பெற்றார்.
அதன் பின்னர் ஆசிரியர் பயிற்சி நெறியையும் சிறப்பாகப் பூர்த்தி செய்தார்.
அங்குத் தொடர்ந்து மூன்று வருகாலம் பணியாற்றிய பானு டீச்சர் நுககஹகெதரயைச் சேர்ந்த யாஸீன் அவர்களைக் கரம் பிடித்த பின்னர் 1994 பெப்ரவரி முதல் திகதியன்று எமது மதீனா தேசிய பாடசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்தார்.
அப்போது முதல் ஆரம்பப் பிரிவில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார்.
ஆரம்பப் பிரிவில் தரம் 1 மற்றும் 2 மாணவர்களுக்குக் கற்பித்ததுடன் மாணவர்களால் மிகவும் விரும்பப்படும் ஆசிரியையாகவும் இருந்தார்.
பானு டீச்சர் எப்போதும் தான் உண்டு தன் வேலையுண்டு என இருந்து விடுபவர். எந்தப் பதவிக்கும் போட்டி போடாதவர்.
பானு டீச்சரிற்கு யாஸிர், ஆஸிர் மற்றும் அகீலா என முன்று பிள்ளைகளும் உள்ளனர்.
மகன்களான யாஸிர் தனியார் நிறுவனமொன்றில் கணக்காளராகவும் (Accountant), ஆஸிர் ஒரு மென்பொறியியலாளராகவும் (Software Engineer) பணியாற்றுவதோடு மகள் அகீலா சென்ற வருடம் நடை பெற்ற உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்து ரஜரட்ட பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுமுள்ளார்.
பணி ஓய்வின் பின்னரான பானு டீச்சரின் வாழ்க்கை மகிழ்சிகரமானதாக இருக்கவும், அவருக்கு நல்ல தேகாரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் கிடைக்க வேண்டிப் பிராத்திப்போம்.